சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிக்கை

சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் தொழில்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, உலகெங்கும் உள்ள தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும் ரூ.60 லட்சம் மதிப்பில் “யாதும் ஊரே” என்ற சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் உருவாக்கப்படும்.

புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் “புதிய பிரிவு” ஒன்று துவங்கப்படும். ஆண்டுதோறும் ரூ.10 கோடி மதிப்பில் “தொழில் வளர் தமிழகம்” என்ற பெயரில் கருத்தரங்குகள், பரப்புரைகள், தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுசெய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும்.

“தொழில் தோழன்” (Biz Buddy) என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய “தூத்துக்குடி -சிப்காட் நிறுவனம், முல்லைக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் – வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

சிப்காட் வல்லம் – வடகால் மற்றும் இராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்படும். சிப்காட் – சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.40 கோடியில் வணிக வசதிகள் மையம் கட்டப்படும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்த, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 3% வட்டி மானியம் 6% ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கோயம்புத்தூரில் 9 ஏக்கர் நிலத்தில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்படும்.

காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் வான்வெளி & பாதுகாப்பு பூங்காவில், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் ரூ.100 கோடியில் நிறுவப்படும்.

கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

காஞ்சிபுரம் – பெரும்பாக்கம், நாகப்பட்டினம் – செம்போடை பகுதிகளில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிபெறும் 10000 பேருக்கு ரூ.7.5 கோடியில் கருவித் தொகுப்புகள் வழங்கப்படும்.

அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் “புதிய தொழிற்பிரிவுகள்” ரூ.44.19 கோடியில் தொடங்கப்படும்.

12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.64.41 கோடியில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் ரூ.40.80 கோடி மதிப்பில் “நம்பிக்கை இணைய கட்டமைப்பு (Blockchain Backbone Infrastructure) அமைக்கப்படும்.

பொதுமக்கள் அரசு துறைகளின் சேவைகளைப் பெற தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் “மக்கள் எண்” உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையான சட்டப்படியான ஆவணங்கள், சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும்.
“மக்களைத் தேடி அரசு” என்ற இந்த திட்டம் ரூ.90 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *